Tuesday, July 29, 2014

மதுரையும்.பாட்டி வீடும்..!


நான் பிறந்ததிலிருந்து இந்த ஐம்பது வயது வரையில் எனக்கு நினைவிலிருந்து மறக்காமல் ஸ்படிகமாய் இருக்கும் அமானுஷ்யங்களையும் இனியும் என் வாழ்வில் இது போல் நடக்கும் அமானுஷ்ய அனுபவங்களையும்
என் மனமேடையைத் தவிர்த்து இணைய மேடையில் எனக்கான "சாந்திக் குடிலில் " அமைதியாக எனக்கு நானும்...என்னைத் தொடரும் என் சந்ததியர்கும் எனக்குப் பின் என் குடும்பத்தில் நுழையவிருக்கும் பந்தங்களுக்கும்  என்  மகன் அரவிந்த் (ரங்கேஷ்​ ) க்கு அம்மாவாகவும், அவனது மனைவிக்கு அம்மாவாகவும், அவர்களின் குழந்தைகளுக்கு அன்புப் பாட்டியாகவும் இங்கே எனது இதயக் கல்வெட்டை பதித்து வைக்கிறேன். என்றாவது , எவராவது படிக்க நேர்ந்தால் ....நேரும். அது இன்னும் நூறு வருடங்கள் கழித்தும் நிகழலாம். அப்போது அவர்களின் நெஞ்சம் துடிக்கும் அதே படபடப்பை இன்றே நான் உணருகிறேன்.

அப்போது எனக்கு வயது ஐந்து இருக்கலாம். மதுரையிலிருந்தோம். அந்த வீடு அப்போதே ஐம்பது வருடங்களுக்கும் மேல் பழைய வீடு என்று நினைக்கிறேன். திண்டுக்கல் ரோடில், இரண்டு மாடிக் கட்டிடம்.. பாரம்பரியக் கட்டிடம் போலிருக்கும். நான் பிறந்த வீடு அது. ஆம்...அப்போதெல்லாம் வீட்டிலேயே தான் பிரசவம் பார்ப்பார்களாம். அப்படித் தான் என் பெரியம்மா, அவர்களின் ஐந்து குழந்தைகளும், என் அம்மாவின் ஐந்து குழந்தைகளும், என் சித்தியின் மூன்று குழந்தைகளும் பிறந்த இடம் அந்த வீட்டின் சமயலறையில் தான், இதில் எனது சித்தியின் மூன்றாவது குழந்தை பிறக்கும் சமயம் எனக்கு 13 வயதிருக்கலாம் என்பதால் அந்த நிமிடங்கள் பசுமையாகவே நினைவில் இருக்கிறது. என் அம்மா கூட சொல்வார்கள், நீங்களும் இப்படித் தான் இந்த அறையில் பிறந்தீர்கள் என்று. அதெல்லாம் வித்தியாசமான ஒரு அனுபவம்.காலத்தால் அழிக்க முடியாத நினைவுகள், இருக்கும் வரை கூட இருக்கும் நினைவுகள் இவை.

வீடு.....நான்கு மொழு மொழுவென்ற பாறாங்கல்லுப் படிகளைக் கடந்து கனமான ரோஸ் உட் கதவு. கதவு முழுவதும் வெண்கலப் பிடிகள், அழகழகான வெண்கல குமிழ்கள் சங்கிலிகள் என்று படி படியாக இழைத்து வேலைப் பாடுகள் செய்யப் பட்ட கதவு...இழுத்து சார்த்தவே இரண்டு பேர்கள் வேண்டும். தள்ளி முடித்து மூச்சு வாங்கிக் கொண்டே உள்ளே வந்த அனுபவங்கள் கூட உண்டு. அதை மூடிவிட்டால் உலகமே இருண்டு போனது போல ஒரு அமைதியும் இருளும் அந்த இடத்தைச் சூழ்ந்து கொள்ளும். சுத்தமாக வெளிக் காற்றே வராது. அதனாலேயே அந்தக் கதவை மூடாமல்  திறந்தபடியே வைத்திருப்பார் எங்கள் பாட்டி.

கதவைத்  திறந்து வைத்திருப்பதால், வெளியில் ரோட்டில் போகும் சைக்கிள் ரிக்ஸா , குதிரை வண்டியின் ஜல் ஜல் சத்தம், எப்போதோ போகும் வரும் காரின் ஹாரன் சத்தம், மாட்டு வண்டி சத்தம் என்று கல கலவென்று இருக்கும்.மாலை வேளை களில் அந்த வாசற்படிகளில் வரிசையாக உட்கார்ந்து கொண்டால் பொழுது போவதே தெரியாது.   பராசக்தி என்ற தமிழ் படத்தை (சிவாஜி கணேசன் அவர்கள் நடித்தது) பெரிய பெரிய வண்டியில் போஸ்டர் படங்கள் வரைந்து இழுத்துக் கொண்டு போனார்கள். மயிலாட்டம், கோலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், நாதஸ்வரம், மிருதங்கம் எல்லாம் முன்னே ஊர்கோலமாக சென்றது. இது நித்தம் நடக்கும்...அந்த ஊர்கோலம் தினம் ஒவ்வொரு சினிமாப் படங்களுக்கும் விளம்பரமாக வந்து செல்லும்.மாலை ஏழு மணியானால் இன்று எந்த சினிமாப் பட விளம்பர ஊர்கோலம் என்று பார்க்கவே மக்கள் கூட்டம் ஓரமாக நிற்கும்.

எங்கள் வீட்டுப் பக்கத்தில் ஒரு சின்ன சந்து போகும். கழுதைக் கார சந்து என்று பெயர் அதற்கு. அந்த சந்தின் சுவர் முழுதும் இண்டு இடுக்கு விடாமல் சினிமா போஸ்டர்கள் தான் அடைத்துக் கொண்டு இருக்கும். கிட்டத்தட்ட அந்த சந்து ஒரு கிலோமீட்டர் நீளம் செல்லும். அது வழி நெடுக இரண்டு பக்கங்களிலும் வித விதமாக சினிமாப் போஸ்டர்கள். பார்க்க விசித்திரமாக இருக்கும்.அந்த வழியாகத் தான் எங்கள் பள்ளிக் கூடமும் இருந்தது. இந்த போஸ்டர்களைப் பார்த்துக் கொண்டு போவது தான் எங்கள் பொழுது போக்கு. பாராக்குப் பார்த்துக் கொண்டு நின்றுவிட்டு, பள்ளிக் கூடம் சென்ற போது அங்கு "நீராருங் கடலுடுத்த " பாடி முடித்துக் கொண்டிருப்பார்கள்....வாழ்த்துதுமே..வாழ்த்துமே....! என்று என்னை வெளியிலேயே நிறுத்தி வைத்து முட்டிக்குக் கீழே பிரம்பால் அடி கொடுப்பார்கள். போஸ்டரின் வித விதமான முகங்கள் தான் அப்போதும் வலி நிவாரணி.

பாம்பாட்டிச் சந்தில் தான் பள்ளிக்கூடம்.ரொம்ப சின்னப் பள்ளி தான். மொத்தமே இப்போது நான் வசிக்கும் வீட்டின் அளவு தானிருக்கும் .மண் தரையில் தான் உட்கார வேண்டும். "அ " 'ஆ'  அங்கிருந்து தான் கற்றுக் கொண்டதாக எனக்கு நினைவு. ஒரு இரண்டு பைசாவுக்கு பொட்டுக் கடலை வாங்கிக் கொண்டு சென்றால் போதும். அதை வைத்து எழுதி அழித்து 'அ ,ஆ,இ,ஈ,' சொல்லித் தருவார் டீச்சர்.வீட்டுக்கு வரும் வழியில் ஒவ்வொரு பொட்டுக் கடலையாக வாயில் போட்டுக் கொண்டே வந்து வீட்டுக்கு நுழையும் போது மொத்தமாக காலி செய்து, அடுத்த நாள் காலையில் பாட்டியிடம் அடிவாங்கிய பின்பே மீண்டும் ஒரு பிடி பொட்டுக் கடலையை பொட்டலமாக்கித் தருவார் பாட்டி.

நானெல்லாம் படிக்கவே இல்லை. உங்களுக்காவது பள்ளிக் கூடம் போகும் நிலை வந்திருக்கே என்று அடிக்கடி சொல்லி  சந்தோஷப் படுவாள் பாட்டி .
எனது பல கனவுகள் அந்த வீட்டைச் சுற்றியே இருக்கும். அத்தனை கனவுகளும் அமானுஷ்யமாகவும் இருக்கும். அதையும் என் வாழ்வில் இது வரை தொடர்ந்து நடந்த பல நிகழ்வுகள், மறக்கமுடியாத அனுபவங்கள். அமானுஷ்ய கனவுகள், தெய்வீக கனவுகள், வினோதமான நிகழ்வுகள் என்று என் நினைவில் நிற்கும் ஒவ்வொரு புதிரான விஷயங்களை இங்கே பதிவிடுவேன்.
(தொடரும்)


4 comments:

  1. எல்லாவற்றையும் மிகவும் நன்றாகவே நினைவுடன் அழகாகச் சொல்லியுள்ளீர்கள்.

    29.07.2014 அன்று தொடரும் போட்டுள்ளீர்கள். கிட்டத்தட்ட ஓராண்டு நிறைவடைய உள்ளதே. எப்போது தொடருமோ ?

    ReplyDelete
  2. எல்லாவற்றையும் மிகவும் நன்றாகவே நினைவுடன் அழகாகச் சொல்லியுள்ளீர்கள்.

    29.07.2014 அன்று தொடரும் போட்டுள்ளீர்கள். கிட்டத்தட்ட ஓராண்டு நிறைவடைய உள்ளதே. எப்போது தொடருமோ ?

    ReplyDelete
  3. //போ ட் டு க் கடலை வாங்கிக் கொண்டு சென்றால் போதும். அதை வைத்து எழுதி அழித்து 'அ ,ஆ,இ,ஈ,' சொல்லித் தருவார் டீச்சர்.வீட்டுக்கு வரும் வழியில் ஒவ்வொரு போ ட் டு க் கடலையாக வாயில் போட்டுக் கொண்டே வந்து வீட்டுக்கு நுழையும் போது மொத்தமாக காலி செய்து, அடுத்த நாள் காலையில் பாட்டியிடம் அடிவாங்கிய பின்பே மீண்டும் ஒரு பிடி போ ட் டு க் கடலையை போட்டலமாக்கித் தருவார் பாட்டி.//

    பொட்டுக்கடலையைப் போட்டுக்கடலை என மூன்று இடங்களிலும் போட்டு விட்டீர்களோ :)

    ReplyDelete
    Replies
    1. அதுபோலவே:

      //போட்டலமாக்கித் தருவார் பாட்டி.//

      =

      பொட்டலமாக்கித் தருவார் பாட்டி

      -=-=-=-=-=-=-=-=-

      //என் நினைவில் நிற்கும் ஒவ்வொரு புதிரான விஷயங்களை இங்கே விதிவிடுவேன்.//

      கடைசி முடிவு இறுதி வரியான:

      //விதிவிடுவேன்//

      =

      பதிவிடுவேன்

      என்று இருந்தால் இன்னும் ஜோராகத்தான் இருக்கும்.

      Delete